NILAIYILLA SANTHOSAM TAMIL STORY

Ads Below The Title
பிரகாஷ் சோர்வாக நடந்து வருவதைப் பார்த்ததும் , தனக்கே முதல் பரிசு கிடைத்து விட்டது போல உணர்ந்தான் ரோஷன் . எப்படிப் பார்த்தாலும் பிரகாஷ் கால்நடையாய் , கிருபா மெட்ரிக்குலேஷன் பள்ளியை அடைய ஒரு மணி நேரம் ஆகும். இப்போதே மணி 9.20 ஆகிவிட்டது . 9.55 க்கு மேல் கேட்டை சாத்தி விடுவார்கள். இந்த சூழ்நிலையில் ரோஷன் நடந்து போய் , ஓவியப் போட்டியில் கலந்து கொள்வதெல்லாம் நடக்காத விஷயம். பிரகாஷ் சைக்கிளை சற்று வேகமாக மிதிக்க முற்பட்டான்.
அன்று மாநில அளவில் சிறுவர்களுக்கான ஓவியப் போட்டி கிருபா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரகாஷும் , ரோஷனும் படிக்கும் திவ்ய தர்ஷினி பள்ளியில் இருந்து அவர்கள் இருவரும் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தார்கள். ரோஷன் நன்றாக வரையக் கூடியவன்தான் . இருந்தாலும் பிரகாஷ் வண்ணங்களைக் கையாளும் விதம் அபாரமாக இருக்கும். போட்டியில் கலந்து கொள்ளும் மற்ற பள்ளிகளில் இவர்கள் அளவிற்கு வரையக் கூடியவர்கள் இல்லை.
இப்போது பிரகாஷ் மட்டும் போட்டியில் கலந்து கொள்ளாவிட்டால் ரோஷன் வெற்றி பெற அதிகாக வாய்ப்பு இருந்தது. இந்த சூழ்நிலை ரோஷன் தாமதமாக நடத்து வருவதைப் பார்த்ததில் ரொம்ப சந்தோஷாக இருந்தது ரோஷனுக்கு .
பிரகாஷ் கெஞ்சலாகக் கேட்டான் ,
" ரோஷன் , கிளம்பும் போது என் சைக்கிள் டயர் வெடிச்சிடிச்சி. சாயங்காலம்தான் ரெடியாகும். நீ கொஞ்சம் என்னையும் உங்கூட கூட்டிட்டுப் போயேன். லேட்டாயிடுச்சு " .
" ஐயய்யோ , ஏற்கனவே என் வண்டில டயர் ரொம்ப வீக்காருக்கு . இதுல டபுள்ஸ் போனா அவ்ளோதான் " சொல்லிவிட்டு பெடலை வேகமாய் மிதித்தான் ரோஷன்.
" இன்னும் இருபது நிமிஷத்துல ஸ்கூல் போயிடலாம். பிரகாஷ் அதுக்குள்ள அங்க வந்து சேர சான்ஸே இல்ல " மனசு சந்தோஷமாய்க் கூவியது. சந்தோஷம் நெடு நேரம் நிலைக்கவில்லை. திடிரென்று வீலில் காற்று குறைந்து போய் ரிம் டங்டங்கென்று அடிபட்டது . பதறிப் போய் சைக்கிளை நிறுத்தினான். முன் சக்கரம் காற்றில்லாமல் ஒட்டிப் போய்க்கிடந்தது. நல்ல வேளையாக அருகில் ஒரு சைக்கிள் கடை தென்பட்டது . அவசரமாய் அங்கு சைக்கிளைத் தள்ளிச் சென்றான்.
அங்கு இருந்த பெரியவர் சொன்னார் ,
" வண்டியை விட்டுட்டுப் போ தம்பி. கடைக்காரர் சாப்பிடப் போயிருக்கார். இன்னும் அரை மணி நேரத்துல வந்துடுவார் " என்றார்.
" அரை மணி நேரமா ? " . உயிரே போய்விட்டது ரோஷனுக்கு. இப்போது மணி 9.35. நடந்து போனால் இன்னும் அரை மணி நேரமாவது ஆகும். அதற்குள் கேட்டை மூடிவிடுவார்கள். அவனுக்கு அழுகையே வந்து விட்டது.
" இவ்ளோ கஷ்டப்பட்டு , பிரகாஷ் பயலைக் கழட்டி விட்டு வேகமா வந்தும் இப்படி ஆயிடிச்சே " மனசு கதறியது. உடைந்து போய் நின்றான் .
" டேய் என்னடா இங்க நிக்கிற ? டைம் ஆகலை ? " . குரல் பிரகாஷுடையது . யாரோ ஒரு மனிதருடன் பைக்கில் வந்து இறங்கினான்.
" டயர் பஞ்சர் " ரோஷனின் குரல் பலவீனமாக ஒலித்தது.
" பரவாயில்ல. கவலைப்படாதே . இது எங்க பக்கத்து வீட்டு மாமாதான். இந்தப் பக்கம் வந்துட்டிருந்தாங்க. நாந்தான் lift கேட்டு ஏறினேன் " . அவரிடம் சொன்னான் ,
" மாமா , இவன் என் friend தான் . இவனும் அங்கதான் வரணும் . இவனையும் ஏத்திக்கலாமே " என்றான்.
அவர் சிரித்தபடி ,
" மூனு பேரெல்லாம் போக முடியாது. நீ வேணும்னா நடந்து வா . இவனை ஏத்திட்டுப் போறேன் " என்றார் . பிரகாஷ் அடுத்த நொடியே ,
" ok மாமா. நீங்க இவனக் கூட்டிட்டுப் போங்க நான் நடந்து வரேன் " என்றான். மாமா சிரித்தபடி ,
" ரெண்டு பேரும் வந்து உக்காருங்கடா "
என்றார்.
போட்டியெல்லாம் முடிந்து , வெளியே வரும்போதும் ரோஷன் எதுவும் பேசாமல் தலை குனிந்தபடியே வந்தான்.
பிரகாஷ் கேட்டான் ,
" என்னடா ஒன்னுமே பேச மாட்ற ? " என்றான் . ரோஷன் தலைகுனிந்தபடியே கேட்டான் ,
" என் மேல உனக்குக் கோவமே வரலையா ? நீ நெனைச்சிருந்தா என்னை அம்போன்னு விட்டுட்டுப் போயிருக்கலாமே " .
பிரகாஷ் சிரித்தபடியே சொன்னான் ,
" உன்னைப் பழிவாங்கிருந்தா இன்னிக்கு ஒரு நாள் மட்டுந்தான் சந்தோஷமா இருந்திருப்பேன். ஆனா இப்ப வாழ்நாள் முழுக்க சந்தோஷமா இருக்கலாம். ஏசப்பா மத்தேயு 5 :44 ல சொல்லிருக்காங்க,
" நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், உங்களைச் சபிக்கிறவர்களைச் ஆசீர்வதியுங்கள், உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள், உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள் ". அதனால மன்னிக்கிறதுதான் எனக்கு சந்தோஷம் .
ரோஷனுக்கு இப்போது பிரகாஷின் ரகசியம் புரிந்தது.
" இன்னும் கொஞ்சம் அவரைப் பத்தி சொல்லேன். கேக்குறதுக்கே ரொம்ப சந்தோஷமா இருக்குது " என்றான் .

மனசுல வன்மத்தை வச்சுக்கிட்டு பழிவாங்குனா கிடைக்கிறது நிலையில்லாத சந்தோஷம் .
ஏசப்பா வார்த்தைகளைக் கேட்டு நடந்தாத்தான் நிலையான சந்தோஷம் .
" நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு " ரோமர் 12 :21
NILAIYILLA SANTHOSAM TAMIL STORY NILAIYILLA SANTHOSAM TAMIL STORY Reviewed by haru on October 25, 2016 Rating: 5

No comments