கண்ணாடி : சூழ்நிலை கதை | Glass : Situation Story

Ads Below The Title
நாம் எவ்வழியோ மக்களும் அவ்வழி


அது ஓர் அழகிய நகரம். அந்த நகரத்தின்  நுழைவு வாயிலில் எப்போதும் ஒரு வயதான பெரியவர்  அந்நியர்கள் யாரும் உள்ளே சென்று விடாமல் காவல் காத்துக்கொண்டிருப்பார். ஒரு நாள் வாலிபன் ஒருவன் நகரத்தின் வாயிலை நோக்கி குதிரையில் வந்துகொண்டிருந்தான்.

அப்போது அங்கிருந்த வயதான காவலாளியிடம் "ஐயா பெரியவரே, இந்த ஊர் மக்கள் எப்படி?"என்று கேட்டான்.


அதற்குக் காவலாளி "ஏன் கேக்குற தம்பி ? இந்த ஊருக்கு குடிவரப் போறியா?" என்று சந்தேகத்துடன் கேட்டார்.

"ஆமாம் பெரியவரே. நான் முன்னாடி இருந்த ஊர் ரொம்ப மோசம். எதுக்கெடுத்தாலும் சண்டைக்கு வருவாங்க. ஒருத்தரைப் பத்தி ஒருத்தர் தப்பா பேசிக்கிட்டும் திட்டிக்கிட்டும், எப்படா அந்த ஊரை விட்டு வருவோம்னு இருந்தது. அதான் கேட்டேன் இந்த ஊர் எப்படி?" என்று கேட்டான்.

''நீ வேற தம்பி, இந்த ஊர் உன்னுடைய ஊரைவிட ரொம்ப  மோசம். போட்டி, பொறாமை, ஜாதிச் சண்டை, கலவரம்ன்னு ஏதாவது ஒரு பிரச்னை இருந்துக்கிட்டே இருக்கும். நீயே நிம்மதியைத் தேடி வர, உனக்கு இந்த ஊரு சரிப்படாது தம்பி" என்று கூறி அந்த வாலிபனை  வெளியே வழியனுப்பி வைத்தார்.

சிறிது நேரம் கழித்து, அவ்வழியாக  வந்த வேறொரு ஆள் காவலாளியிடம் அதே கேள்வியைக் கேட்டான்.

"ஐயா, இந்த ஊரில் தங்கி வியாபாரம் பண்ணலாம்ன்னு இருக்கேன். இந்த ஊர் மக்கள் எப்படி?" பெரியவர் சிரித்துக்கொண்டே,
"ஏன் தம்பி, உனக்குக் கல்யாணம் ஆகிடுச்சா ?"என்று கேட்டார்.

"ரெண்டு குழந்தையே இருக்குதுங்க ஐயா" என்றான்.

"அப்புறம் ஏன்? இந்த ஊருக்கு வர்ற? உங்க ஊர்லயே வியாபாரம் பண்ணலாம்ல? " என்றார் காவலர்.

"எங்க ஊர் மாதிரி வராதுங்க.. அந்த ஊர் மக்கள் ரொம்பப் பாசக்காரங்க. என் குடும்பம் இப்போ வறுமையில இருக்கு. சம்பாதிக்கத்தான் இந்த ஊருக்கு வந்தேன். நல்லா  சம்பாதிச்சிட்டு மறுபடியும் அங்கேயே போயிடுவேன்" என்று கண் கலங்கியபடியே கூறினான்.

"அழாதே தம்பி, இந்த ஊர் மக்களும் ரொம்ப நல்லவங்க. தைரியமா நீ வியாபாரம் பண்ணலாம்" என்று கூறி கதவுகளைத் திறந்து உள்ளே அனுப்பி வைத்தார்.

காவலாளியின் அருகில் இருந்த ஒருவர் இந்த இரண்டு சம்பவங்களையும் கவனித்துக்கொண்டிருந்தார்.

உடனே அவரிடம் "முதலில் வந்தவர்கிட்ட இந்த ஊர் பொல்லாததுன்னு சொன்னீங்க, இவர்கிட்ட மட்டும் நல்ல ஊர்ன்னு சொல்லுறீங்களே ஏன்?" என்று சந்தேகத்துடன் கேட்டார்.

அதற்குப் பெரியவர்  "இந்த உலகம் கண்ணாடி மாதிரி. நாம எப்பிடி இருக்கிறோமோ அப்படித்தான் கண்ணாடி நம்மைக் காட்டும்'' என்றார்.

Source: vikatan.com
கண்ணாடி : சூழ்நிலை கதை | Glass : Situation Story கண்ணாடி : சூழ்நிலை கதை | Glass : Situation Story Reviewed by haru on March 21, 2017 Rating: 5

No comments