நன்மை தீமை : சூழ்நிலை கதை | Good and Bad Situation Story
நன்மை தீமை இரண்டையும் ஏற்றுக்கொள்
ஒரு வயதான விவசாயி தன் வயலில் பாடுபட்டு உழைத்து அதில் வரும் சொற்பமான வருமானத்தில் வாழ்ந்துகொண்டிருந்தார். ஒரு நாள் அவர் வளர்த்து வந்த குதிரை காணாமல் போய்விட்டது. தகவலைக் கேள்விப்பட்ட அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் "என்ன ஒரு துரதிர்ஷட நிலை?" என்று பரிதாபமாக விசாரித்தனர்.
"இருக்கலாம்" என்று ஒரே வார்த்தையில் அவர்களின் ஆறுதலுக்கு விவசாயி பதிலளித்தார்.
அடுத்த நாள் தொலைந்து போன குதிரை தன்னுடன் மூன்று குதிரைகளை உடன் அழைத்து வந்தது. இதை ஆச்சர்யமாக பார்த்த அக்கம்பக்கத்தினர், "நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி , இப்போ நாலு குதிரை உனக்கு கிடைச்சிடுச்சு" என்றனர்.
தனக்குக் கிடைத்த அதிர்ஷ்டத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் மறுபடியும் "இருக்கலாம்" என்று கூறி முடித்தார்.
ஒரு வாரத்துக்குப் பிறகு, விவசாயியின் மகன் குதிரையை வேகமாக ஓட்டிச்சென்று தவறுதலாக கீழே விழுந்து காலை உடைத்துக்கொண்டான். "என்னப்பா, உனக்கு ஒரு நல்லது நடந்தா அடுத்து ஒரு கெட்டது நடக்குதே. உன் பையன் எழுந்து நடக்க ஆறு மாசத்துக்கும் மேல் ஆகும் போல, ரொம்ப கஷ்டமான நிலைமை" என்று கூறி ஆதங்கப்பட்டனர்.
விவசாயி பெரிதாக வருந்தாமல் "இருக்கலாம்" என்று அதே பதிலைக் கூறினார்.
ஒரே வாரத்தில் நாட்டில் போர் வந்துவிட்டது. வீட்டில் இருக்கும் எல்லா இளைஞர்களும் கட்டாயம் போரில் கலந்துகொள்ள வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. வீடு வீடாக ராணுவத்தினர் புகுந்து இளைஞர்களை அழைத்துச் சென்றனர். ஆனால், அந்த ஏழை விவசாயியின் மகனுக்குக் கால் உடைந்து இருந்ததால் அவனை மட்டும் அழைத்துச் செல்லவில்லை.
இதைக் கண்டு ஊர் மக்கள் அந்த விவசாயியின் அதிர்ஷ்டத்தைக் கண்டு புகழ்ந்தனர்.
இப்போதும் அந்த விவசாயி " இருக்கலாம்" என்று கூறினார்.
அவர் ஏன் எல்லாச் சூழ்நிலையிலும் ஒரே மாதிரியான சமமான மனநிலையில் இருந்தார் ? காரணம் உண்டு.
அந்த விவசாயி வாழ்வின் இயல்புகளைப் புரிந்துகொண்டவர். நாள்களில் நல்ல நாள், கெட்ட நாள் என்று எதுவும் இல்லை. ஒவ்வொரு நாளும் நமக்கு மறைமுகமாகப் பல பாடங்களை உணர்த்திக்கொண்டிருக்கின்றது. நல்லது கெட்டது இரண்டும் நாணயத்தின் இருபக்கங்கள். கஷ்டமான சூழ்நிலைகளில், இது நிரந்தரம் அல்ல நாளை என்று ஒன்று இருப்பதை மறக்கவேண்டாம்.
சந்தோஷமான சூழ்நிலையில் தலை கால் புரியாமல் ஆடக்கூடாது. யாருக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எதையும் தலைக்கு எடுத்துச் செல்லாமல், எதைப்பற்றியும் விமர்சிக்காமல் இருப்பது நலம்.
சுகம் - துக்கம் இவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை என்பதை உணர்ந்தாலே போதுமானது.
source: vikatan.com
சுகம் - துக்கம் இவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை என்பதை உணர்ந்தாலே போதுமானது.
source: vikatan.com
நன்மை தீமை : சூழ்நிலை கதை | Good and Bad Situation Story
Reviewed by haru
on
March 21, 2017
Rating:
No comments