Maramum mara viyabariyum tamilstory

Ads Below The Title
ஒரு பண்ணை வீட்டில் மிகப் பெரிய மரம் ஒன்று இருந்தது. அதற்கு நூறு வயதுக்கு மேல் இருக்கலாம். மர வியாபாரி ஒருவனுக்கு பெரிய வீடு ஒன்று கட்டுவதற்காக நன்கு வளர்ந்து முதிர்ந்த மரம் தேவைப்பட்டது. இந்த மரத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு அந்தப் பண்ணையின் உரிமையாளரிடம் விலை கேட்டான். அவரோ அது பழமையான மரம் என்பதால் அதை விற்க மறுத்து விட்டார். வியாபாரிக்கு அந்த மரம்தான் தனது வேலைக்கு முற்றிலும் பொருத்தமானது என்று பட்டது. எனவே கொஞ்சம் கூடுதலான தொகையையே கொடுப்பதாகக் கூறினான். அதற்கும் உரிமையாளர் சம்மதிக்கவில்லை. கடைசியாகத் தன்னுடைய நிலையை அவரிடம் கூறிக் கெஞ்சினான். அவருக்கும் பாவமாக இருந்தது. இருந்தாலும் பல தலைமுறைகளைக் கடந்து வந்திருக்கும் மரத்தை வெட்ட அவருக்கு மனதில்லை. "ஐயா! உன் நிலை எனக்கும் புரிந்தது. இருந்தாலும் வீட்டில் ஒரு நபர் மாதிரி இருக்கும் மரத்தை எப்படி வெட்டி சாய்க்கமுடியும்? நீ வேறு இடத்தில் தேடிப்பார்" என்றார். வியாபாரிக்கு ஒரு யோசனை தோன்றியது,
" முதலாளி! என் வேலை ஆரம்பிக்க இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. அதற்குள் உங்கள் மரத்தின் ஆயுள் முடிந்து மரம் பட்டுப்போய்விட்டால் நான் மரத்தை வெட்டிக் கொள்கிறேன். அட அப்படி எதுவும் நடக்கவில்லை என்றாலும் நான் அதுவாகவே எப்போது காய்ந்து போகிறதோ அப்போது வந்து வெட்டிக் கொள்கிறேன். எப்படி ஆனாலும் இந்த மரத்தை எனக்கு மட்டுமே விற்க வேண்டும். சரியா? "
என்றான். அவனது கோரிக்கை வினோதமாகப் பட்டாலும் முதலாளி சரி என்று தலையசைத்தார்.
அவன் சொன்னதுடன் நிற்காமல் ஒரு பணமுடிப்பையும் அவர் கையில் திணித்து,
"இந்த மரத்தை நான் வாங்கிட்டேன். மறுக்காமல் இந்த கிரயத்தை வாங்கிக்குங்க முதலாளி" என்றான் .
"பைத்தியமா இவன்? என்னைக்கு இந்த மரம் காஞ்சு போறது , என்னைக்கு இவன் வெட்டுறது. சரி! பணத்துக்குப் பணமும் ஆச்சு. இவன் இனி தொல்லையும் இருக்காது " என்று எண்ணியபடி பணத்தை வாங்கிக் கொண்டு சொன்னார்
" இனி இந்த மரம் என்னைக்குப் பட்டுப் போகுதோ அன்னைக்கே உனக்கு சொந்தம் " .
வியாபாரிக்கு வாயெல்லாம் பல். 
" முதலாளி! நம்ம ஒப்பந்தத்துக்கு அடையாளமா ஒன்னே ஒன்னு வேணும். இந்த மரத்தோட அடிப்பகுதியிலேர்ந்து ஒரு அடி அகலத்துக்கு மரத்தோட பட்டையை மட்டும் சுத்தி உரிச்சு எடுத்து வச்சுக்குறேன். அனுமதி கொடுப்பீங்களா ? " என்றான்.
முதலாளி அவன் முதுகில் தட்டி,
" என்னை நம்பி மரத்துக்கு உண்டான முழுக் கிரயத்தையுமே குடுத்திட்ட.
இந்தப் பட்டையைக் கூடவா உன்னை நம்பி தராம இருப்பேன். தாராளமா எடுத்துக்கய்யா" என்றார்.
அவனும் சரியாக ஒரு அடி அகலத்தில் மரத்தைச் சுற்றிலும் பட்டையை உரித்து எடுத்துக் கொண்டு ஒரு பெரிய கும்பிடு போட்டுக் கிளம்பினான்.
"ம்ம்ம். இந்தக் காலத்துலேயும்கூட இப்படி ஒரு அப்பாவி. பாவம்!" என்றபடி பணத்தை மடியில் கட்டிக்கொண்டார்.
உண்மை என்ன தெரியுமா ?
மரத்தின் பட்டைதான் அதற்குத் தொப்புள் கொடிமாதிரி. அதற்கு வேண்டிய சத்துக்கள் எல்லாம் அதன் வழியாகத்தான் கடந்து செல்லும். சரியாய் ஓரிரு மாதங்களிலேயே மரம் வேண்டிய ஊட்டம் கிடைக்காமல் பட்டுப் போனது. வியாபாரியும் வந்து மரத்தை வெட்ட ஆரம்பித்தான். முதலாளிக்கு மட்டும் நூறு வருஷத்து மரம் திடீரென்று காய்ந்து போன அதிசயம் இன்னும் புரியவே இல்லை.
செல்லமே! நூறு வருஷத்து மரமாய் இருந்தாலும் வேரோடு தொடர்பு அற்றுப் போகும்போது காய்ந்து போகிறது. 
"ஆதலால் பிரியமானவர்களே, இவைகளை முன்னமே நீங்கள் அறிந்திருக்கிறபடியால், அக்கிரமக்காரருடைய வஞ்சகத்திலே நீங்கள் இழுப்புண்டு உங்கள் உறுதியிலிருந்து விலகி விழுந்துபோகதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்"
2 பேதுரு 3 :17 .
Maramum mara viyabariyum tamilstory Maramum mara viyabariyum tamilstory Reviewed by haru on July 12, 2017 Rating: 5

No comments