poruppu tamil story
பொறுப்பு
ஒரு ஊரில் வயதான தம்பதியர் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு ஐந்து மகன்கள். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. ஐந்து மருமகள்களும் அந்தப் பெரிய வீட்டில் ஒரே கூட்டுக்குடும்பமாக வசித்தனர்.குடும்பத் தலைவிக்கு அதிகம் வயதாகிவிட்டது. நோயும் நிறைய வந்துவிட்டது. அதனால் அந்தப் பெரிய குடும்பத்தின் நிர்வாகப் பொறுப்பை, யாராவது ஒரு பொறுப்புள்ள மருமகளிடம் ஒப்படைக்க நினைத்தாள். ஐந்து மருமகள்களில் யாரிடம் குடும்பப் பொறுப்பை ஒப்படைப்பது என்ற குழப்பம்.
யோசித்தாள். ஒரு நல்ல யோசனை தோன்றியது.
ஒருநாள் ஐந்து மருமகள்களையும் அழைத்து ஆளுக்கு ஒரு படி வேர்க்கடலையைக் கொடுத்தாள். ""மருமகள்களே! ஆறு மாதம் சென்ற பிறகு இந்த வேர்க்கடலைகளைக் கேட்பேன். கொண்டு வந்து தரவேண்டும்!'' என்றாள்.
மருமகள்களும் அதற்கு ஒப்புக்கொண்டனர்.
ஆறுமாதம் சென்றது.
குடும்பத் தலைவி தனது ஐந்து மருமகள்களையும் அழைத்து, தான் கொடுத்த வேர்க்கடலைகளைத் திருப்பிக் கேட்டாள்.
""ஆறு மாதம் வேர்க்கடலையை வைத்திருந்தால் புழுத்துப் போகாதா? அதனால் அவை வீணாகிவிடுமே. ஆகவே, அதை உடனே வறுத்து, குடும்பத்தோடு சாப்பிட்டு விட்டோம்!'' என்றாள் மூத்த மருமகள்.
""நீங்கள் கொடுத்த வேர்க்கடலையை அப்படியே ஓர் அடுக்குப் பானைக்குள் போட்டு வைத்திருந்தேன். நீங்கள் கேட்கும்போது இதைத் திருப்பிக் கொடுப்பது தானே மரியாதை. இந்தாருங்கள்!'' என்று அந்த ஒருபடி வேர்க்கடலையைத் திருப்பிக் கொடுத்தாள் இரண்டாவது மருமகள்.
""ஓர் ஏழைக் குடும்பம் பசியால் துடித்துக் கொண்டிருந்தது. அதைப் பார்க்க மனம் பொறுக்கவில்லை. ஆகவே, அவர்கள் மீது இரக்கப்பட்டு ஒரு படி வேர்க்கடலையையும் அவர்களுக்கு கொடுத்து விட்டேன்!'' என்றாள் மூன்றாவது மருமகள்.
""ஊரிலிருந்து என் பெற்றோர் ஒருமுறை வந்திருந்தனரே, அவர் களிடம் தம்பி, தங்கைகளுக்குக் கொடுக்கும்படி கூறிக் கொடுத்து அனுப்பிவிட்டேன்!'' என்றாள் நான்காவது மருமகள்.
ஐந்தாவது மருமகள் இரண்டு ஆட்களின் துணையோடு ஒரு மூட்டை வேர்க்கடலையைக் கொண்டு வந்து தன் மாமியாரின் முன்னே போட்டாள்.
""அத்தை! நீங்கள் கொடுத்த வேர்க்கடலையை ஆறு மாதங்கள் அப்படியே வைத்திருப்பதால் என்ன பயன்... என்ன லாபம்...? என்று யோசித்தேன். என் தந்தை வீட்டுத் தோட்டத்தில் விதைத்தால் ஒன்றுக்குப் பத்தாக விளைந்து லாபம் கிடைக்குமே என்று நினைத்தேன்.
நிலத்தைப் பண்படுத்தி ஒருபடி வேர்க்கடலையையும் விதைத்தேன். இந்த ஆறு மாதத்தில் அது ஒரு மூட்டை வேர்க்கடலையாகப் பெருகி விட்டது. இந்தாருங்கள்!'' என்றாள். அதைக் கண்ட மாமியார் மகிழ்ந்து போனாள்.
பெரிய குடும்பத்தை நிர்வகிக்கும் தகுதியும், பொறுப்பும் அவளுக்கே உண்டு என்று தீர்மானித்தாள். உடனே பொறுப்பை ஐந்தாவது மருமகளிடம் ஒப்படைத்தாள்.
அதை மற்ற நான்கு மருமகள்களும் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டனர்.
poruppu tamil story
Reviewed by haru
on
August 29, 2017
Rating:
No comments