சிறுவர் கதைகள் - நீதி தவறாத மன்னன்
முன்னொரு காலத்தில் நீதி தவறாத மன்னன் ஒருவன் ஆண்டு வந்தான். மக்கள் அவனை மிகவும் மதித்துப் போற்றினர். தங்கள் உயிரும், கண்ணும்போல் பேணி வாழ்ந்தனர். அம்மன்னனது வெண்கொற்றக் குடையின் கீழ் மக்கள் எவ்விதக் குறையும் இல்லாமல் இன்புற்று வாழ்ந்தனர். அம்மன்னன் உடலில் நரையும், திரையும் தோன்றிக் கிழவனாகிவிட்டான்.
ஒருநாள் தன் புதல்வர்கள் மூவரையும் அழைத்தான். புதல்வர்களைத் தன் அருகில் அமரச் சொன்னான். அவர்களைப் பார்த்து கூறினான்.
"என் அருமை மைந்தர்களே! நான் தொண்டுக் கிழவனாகி விட்டேன். இனி என்னால் நல்ல முறையில் அரசாள முடியாது. பொறுப்புகளையும், கடமைகளையும் இனி நல்ல முறையில் செய்வதற்கு எனக்குச் சக்தி இல்லை. ஆகையால், நான் கால் நடையாகவே காசிக்குச் சென்று வருகிறேன். அரசாளும் பொறுப்பை நீங்கள் மூவரும் பார்த்துக் கொள்ளுங்கள்!'' என்று கூறினான்.
மன்னன் அதன் பின்னர் எந்த விதக் கவலையுமின்றிக் காசிக்குப் புறப்பட்டு சென்றான். அவனது புதல்வர்கள் மூவரும் அரசியல் அலுவல்களைத் தம்முள் பகிர்ந்து கொண்டு, நாட்டை ஆண்டு வந்தனர். காசிக்குச் சென்ற மன்னனைப் பற்றி ஓர் ஆண்டு வரையில், எந்த விதமான தகவலும் வரவில்லை. அதன் பிறகு எல்லாரும் வருந்தத்தக்க செய்தி வந்து சேர்ந்தது. "கால் நடையாகச் சென்ற மன்னன் காசிக்குச் சென்றடையுமுன் வழியிலேயே இறந்து விட்டான்" என்னும் துயரச் செய்தி வந்து சேர்ந்தது. மன்னனுடன் சென்றவர்கள் திரும்பி வந்து துயரச் செய்தியைத் தெரிவித்தனர்.
அம்மன்னனுடைய அருமை பெருமைகளை எண்ணி நாடு முழுவதும் துயரத்தில் மூழ்கியது. துயரமோ, மகிழ்ச்சியோ என்றும் நிலை பெறுவதன்றோ? சில நாட்களில் எல்லாரும் ஒருவாறு துயரம் நீங்கி, தத்தம் செயல்களில் கவனம் செலுத்தினர். ஒருநாள் ஏழைக் கிழவன் ஒருவன், கிழிந்த உடைகளை அணிந்து கொண்டு அரண்மனை பக்கம் வந்தான்.
"பழைய மன்னவன் இல்லையே!'' என்று சொல்லி வாய்விட்டு அழுதான். பலரும் அவனை தேற்ற, அவன் ஒருவாறு மனம் தேறினான். அதன் பின்னர் கிழவன், அம்மன்னவனின் பிள்ளைகளின் நிலைமைகள் பற்றிச் சிலரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டான்.
தந்தை இறந்த செய்தியைக் கேட்ட நாள் முதலாக முதல் மகன் துயரில் மூழ்கி, வருந்தி வருந்தி இளைத்துத் துரும்பாகிவிட்டான். அவனது முகத்தில் பொலிவில்லை. அவன் பேசிய சொற்களில் தெளிவில்லை. அவனது செயல்களில் அவனுக்குக் கவனம் இல்லை. தந்தையிடம் அவன் வைத்திருந்த அன்பு, அவனை அந்த நிலைக்கு ஆளாக்கிவிட்டது.
இரண்டாம் மகன், தனக்கு அரசியலில் பங்கு கிடைத்த நாள் முதலாக ஆடம்பர வாழ்க்கையை மேற்கொண்டொழுகி வந்தான். நன்றாக உடை உடுத்துவது, சுவை மிக்கவற்றையே உண்பது, இன்பமாகப் பொழுது போக்குவது ஆகியவற்றில் தன் கவனத்தை முழுமையாகச் செலுத்திக் கொண்டிருந்தான்.
மூன்றாம் மகனுக்குத் தந்தையின் மறைவு அதிர்ச்சியைக் கொடுத்தது. ஆனாலும், "தந்தைக்குப் பின் அவரது பெயர் கெடாத வகையில் நாட்டைப் பொறுப்புடன் ஆள வேண்டுமே. மூத்த அண்ணன் இதனை அறியாமல் துயரத்தில் மூழ்கியிருக்கிறான்; இரண்டாம் அண்ணன் கடமைகளை மறந்து, உலக இன்பங்களில் மூழ்கிக் காலங்கழிக்கிறான். எல்லாப் பொறுப்புக்களும் என்னைச் சார்ந்துவிட்டன. மக்களின் நலம் கருதி செங்கோல் செலுத்தும் திறனை இறைவன் எனக்கு அளித்தருள்வானாக. இவன் தந்தை இவனைப் பெறுவதற்கு என்ன தவம் செய்தானோ என்று உலகம் சொல்லுமாறு நடந்து கொள்வதுதான், மகன் தந்தைக்குச் செய்யத்தக்க கடமையாகும். அந்தக் கடமையைச் செய்ய நல்ல மன வலிமையையும், ஆற்றலையும் நான் பெறுவது எவ்வாறு?" என்று எண்ணி எண்ணி அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்துத் திட்டமிட்டு அரசியல் அலுவல்களை ஒழுங்காகக் கவனித்து வந்தான்.
அவ்வாறு இருந்து வந்த மூன்று பிள்ளைகளின் நிலைமைகளையும், அக்கிழவனிடம் விளக்கமாக எடுத்துக் கூறினர். அவற்றைக் கேட்டறிந்த அக்கிழவன் வேறு எவனும் அல்லன், பழைய மன்னவனாகிய தந்தைதான்.
அம்மன்னவன் திட்டமிட்டு அவ்வாறு செயல் புரிந்தான். தான் இறந்தபிறகு என்ன நடக்கும் என்பதை அறியவேண்டி, தான் இறந்துவிட்டதாகக் கூறுமாறு தன்னுடன் வந்தவர்களிடம் கூறி, அவர்களை முன்னதாக அனுப்பி வைத்தான். அவர்களும் திரும்பி வந்து அவ்வாறே செய்தனர். பின்னர் மன்னவனே கிழக்கோலத்தில் வந்து, தன் புதல்வர்களின் நிலைமைகளைக் கேட்டறிந்தார்.
அப்போது மன்னவனுக்குத் தன்மீது உண்மையான அன்புள்ள மகன் எவன் என்பது நன்கு விளங்கிவிட்டது. மன்னன் உடனே அரண்மனைக்குச் சென்றான். தான் பழைய மன்னன் என்பதை வெளிப்படுத்தினான். எல்லாரும் அவனை பெரு மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அவன் அரண்மனையில் சில நாட்கள் தங்கியிருந்து, தன் மூன்றாம் புதல்வனாகிய இளையமகனே ஆளுதல் வேண்டும் என்று முடிவு செய்து, அவனுக்கு முடி சூட்டினான்.
இளைய மகனுக்கு முடி சூட்டிய பின்னர், மன்னன் மன அமைதியோடு காசிக்குச் சென்றான். அங்கே தங்கித் தன் இறுதி நாட்களைக் கழித்தான்.
சிறுவர் கதைகள் - நீதி தவறாத மன்னன்
Reviewed by haru
on
March 10, 2013
Rating:
No comments