சிறுவர் கதைகள் - தங்கத் தூண்டில்
வசந்த், சுந்தர் இருவரும் அண்ணன் தம்பிகள். மீன் பிடித்து வாழ்க்கை நடத்தி வந்தனர். ஒருநாள் நண்பகல் நேரம், அவர்கள் இருவரும் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பிச்சைக்காரன் ஒருவன் அங்கே வந்தான். எலும்பும் தோலுமாக இருந்த அவனைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.
அவர்களிடம் அவன், “சாப்பிட்டுப் பல நாட்கள் ஆகின்றன. ஏதேனும் உணவு தாருங்கள்!” என்று கெஞ்சினான். இரக்கப்பட்ட வசந்த் அவனுக்கு உணவு தந்தான்.
இதைப் பார்த்த சுந்தர், “அண்ணா! இப்படிப்பட்ட சோம்பேறிகளிடம் இரக்கம் காட்டக் கூடாது!” என்று எரிச்சலுடன் சொன்னான். அடுத்த நாளும் அந்தப் பிச்சைக்காரன் அங்கே வந்தான். அவனுக்கு வசந்த் உணவு தந்தான். மீண்டும் இவன் இங்கே வந்து பிச்சை எடுக்கிறானே என்று கோபம் கொண்டான் சுந்தர்.
“சோம்பேறிப் பயலே! அடுத்த முறை உன்னை இங்கே பார்த்தால் தொலைத்து விடுவேன்!” என்று கத்தினான் சுந்தர். மூன்றாவது நாளும் பிச்சை கேட்டு அங்கே வந்தான் அவன். கோபத்தால் துடித்த சுந்தர் அங்கிருந்த தூண்டில் ஒன்றை எடுத்துக் கொண்டான். அவனைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு ஏரிக்கரைக்கு வந்தான்.
“இப்படிப் பிச்சை எடுத்து இழிவான வாழ்க்கை நடத்துகிறாயே? உனக்கு மீன் பிடிக்கக் கற்றுத் தருகிறேன். இந்தத் தூண்டிலை வைத்துப் பிழைத்துக் கொள்!” என்றான். அவனுக்கு மீன் பிடிக்கக் கற்று கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றான். அதன் பிறகு அந்தப் பிச்சைக்காரன் அவர்கள் வீட்டிற்கு வருவதே இல்லை.
பல ஆண்டுகள் சென்றன. செல்வந்தர் ஒருவர் அழகிய குதிரைகள் பூட்டப்பட்ட வண்டியில் அங்கே வந்தார். அவர் கையில் தங்கத்தால் செய்யப்பட்ட சிறிய தூண்டில் ஒன்று இருந்தது. வசந்த்தும், சுந்தரும் அவரைப் பார்த்தனர். தங்கத் தூண்டிலை சுந்தரிடம் தந்தார் அவர். “என் அன்புப் பரிசாக வைத்துக் கொள்ளுங்கள்!” என்றார்.
தன் வீட்டிற்கு வந்த பிச்சைக்காரன்தான் அவன் என்பது வசந்த்துக்கு தெரிந்தது.
கோபத்தால் துடித்த அவன், “நீ சாகப் பிழைக்க இங்கே வந்தாய். உனக்கு உணவு தந்துக் காப்பாற்றியவன் நான். எனக்குத்தான் இந்தத் தங்கத் தூண்டில் உரியது. என்னிடம் தா!” என்று கத்தினான். ஆனால், அவரோ, “இது உங்கள் தம்பிக்குத்தான் உரியது!” என்று உறுதியாகச் சொன்னார். இதை வசந்த் ஏற்றுக் கொள்ளவில்லை. வழக்கை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றான். நடந்ததை எல்லாம் விசாரித்தார் நீதிபதி.
வசந்த்தைப் பார்த்து அவர், “நீ இவருக்கு உணவு அளித்துக் காப்பாற்றியது உண்மைதான். நீ செய்த உதவி இவர் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. உன் தம்பியோ இவர் வாழ்வதற்கு வழி காட்டினார். அதைப் பயன்படுத்தி இவர் இந்த நிலைக்கு உயர்ந்தார். நிலையான உதவி செய்த சுந்தருக்கு இவர் தூண்டிலைப் பரிசு அளித்தது சரியே. இந்தத் தங்கத் தூண்டில் சுந்தருக்கே உரியது. இதுவே என் தீர்ப்பு!” என்றார்.
சிறுவர் கதைகள் - தங்கத் தூண்டில்
Reviewed by haru
on
March 07, 2013
Rating:
No comments